Tuesday, 5 December 2017

மாணவ மைய கலைத்திட்டம்

கற்பிக்கும் கல்வியால் தன்னம்பிக்கை உள்ள சமுதாயத்தை உருவாக்க முடியவில்லை என்றால் அது இந்த கல்வித்திட்டம் அடைந்திருக்கும் மிகப்பெரிய தோல்வி. புத்தகத்தில் படித்ததை அப்படியே திருப்பி எழுதத் தெரிந்த மனப்பாட மெஷின்களாக மாணவர்களை உருவாக்கி அதிலும் அச்சுப் பிசகாமல் வெளிப்படுத்த தெரிந்த மெஷினை தோள்களில் தூக்கி வைத்து கொண்டாடுவது பல ஆண்டுகாலமாக தொடர்ந்து வரும் வேடிக்கை. இவர்களால் புதிதாக சிந்திக்கவோ, புதிய விஷயங்களை கண்டறியவோ முடியாது என்கிற உண்மை புரிந்த பின்னர் இப்போதுதான் கல்வித்திட்டத்தை மாற்றியமைத்துள்ளனர்.
மாணவர்களை மையப்படுத்திய கல்வித் திட்டம் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. மாணவன் என்பவன் சொன்னதைக் கேட்டு, மாற்றமேதும் இல்லாமல் செய்து காட்டும் கணினி கிடையாது. சிந்திக்கத் தெரிந்தவன் மனிதன். அவனது சுய விருப்பங்களுக்கு மதிப்பளிப்பதன் மூலம் தான் அவர்களை உதாரண மனிதர்களாக உருவாக்க முடியும். வீட்டில், சமுதாயத்தில் மற்றும் கல்வி நிலையத்தில் என பல இடங்களிலும் சந்திக்கும் உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடியாது என்பதை இப்போது தான் புரிந்து கொண்டுள்ளது கல்வித்துறை. 
மாணவர்கள் எந்த மன இடர்பாடும் இன்றி கல்வியைத் தொடர தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக 10 உளவியல் நிபுணர்கள் பள்ளிக் கல்வித்துறையால் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக அரசு பள்ளி மாணவர்களை தயார்படுத்துவதுதான் இத்திட்டத்தின் மைய நோக்கம்.
இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள உளவியல் நிபுணர்களுக்கு பிரத்யேகமாக கவுன்சிலிங் வேன் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எல்.சி.டி. டிவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் உளவியல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் புத்தகங்களும் இதில் இடம் பெற உள்ளன. இதில் உளவியல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் காணொளிக் காட்சிகளும் இடம் பெறுகிறது.

No comments:

Post a Comment