Saturday, 9 September 2017

நாலடியார்

                   திருக்குறளுக்கு அடுத்த நிலையில்வைத்துப் போற்றப்பெறும் சிறப்பு வாய்ந்த அறநூல் நாலடியார். நூல் அமைப்பில் இரண்டிற்கும் மிகுந்த ஒற்றுமை உண்டு. திருக்குறள் சூத்திரம் போன்று இரண்டு அடிகளில் கருதிய பொருளைச் சுருங்கச் சொல்லிவிளங்க வைக்கிறது; நாலடியாரோ, பொருள்களைத் தக்கஉதாரணம் காட்டி விளக்குவதோடு, கற்போர் உளம் கொளும்வகையில் தெளிவுபடவும் உரைக்கின்றது. இவ்வகையில் நாலடியாரைத் திருக்குறளின் விளக்கம் என்று கூறலாம்.'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என வழங்கும் பழமொழியிலும், 'பழகு தமிழ்ச்சொல் அருமை நால்இரண்டில்' என உரைக்கும் தனிப்பாடல் பகுதியிலும் இந்த இரு அற நூல்களையும் ஒருசேர வைத்து எண்ணுதல் நோக்கத் தக்கது.
நான்கு அடி வெண்பாக்களால் இந்நூல் செய்யுட்கள் அமைந்திருத்தலின் இதனை 'நாலடி'என்றும், 'ஆர்'என்னும் சிறப்பு விகுதியை இறுதியில் இணைத்து, 'நாலடியார்' என்றும் வழங்கி வருகின்றனர்.குறளைத் 'திருக்குறள்' என்று குறித்ததைப் போல,நாலடி வெண்பாக்களாலாகிய வேறு நூல்கள் பல தமிழில் இருக்கவும், இந் நூல் ஒன்றையே 'நாலடி' என்ற பெயரால்குறித்து வந்துள்ளனர். இந் நூலில் அமைந்துள்ள பாடல்தொகையை உட்கொண்டு, 'நாலடி நானூறு' என்றும் இதுகுறிக்கப் பெறுகின்றது. இதற்கு 'வேளாண் வேதம்' என்றஒரு பெயரும் உளதென்பது சில தனிப் பாடல்களால் தெரியவருகிறது.

No comments:

Post a Comment