Tuesday, 7 November 2017

கெலன் கெல்லர்

புகழ்பெற்ற பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கிய ஹெலன் கெல்லர் என்னும் பெண்மணியிடம் அதிசயிப்பதற்கு ஒன்றுமில்லை, அவரும் இயல்பான மாந்தராக இருந்திருந்தால்! ஆனால் கண்பார்வையற்ற, கேட்கவும் பேசவும் இயலாத ஒரு மாற்றுத் திறனாளி என்பதை அறிந்தால் எத்தனை வியப்பு உண்டாகிறது. அத்தகைய வியக்கத்தக்கப் பெண்மணியின் நினைவு நாளில் அவரைப் பற்றிய இக்கட்டுரையைப் பதித்து அவர் பெருமையை நினைவுகூர்வதில் மிகவும் மகிழ்கிறேன்.
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள துஸ்கும்பியாவில் 1880ஆம் வருடம் ஜூன் 27ஆம் நாள் பிறந்த ஹெலன் ஆடம்ஸ்  கெல்லருக்குப் பிறவியில் குறைகளேதுமில்லை. பதினெட்டு மாதக் குழந்தையாயிருக்கும்போது ஏற்பட்ட மூளைக்காய்ச்சலால் தம் பார்வையை, பேசும்,  கேட்கும் திறனை இழந்தவரை, தம் வாழ்நாளின் இறுதிவரை அயராது அடுத்தவருக்காகப் பாடுபடத் தூண்டியது அவருடைய மனோதிடமாகும். அதற்கு உறுதுணையாயிருந்தவர் அவருக்கு வாய்க்கப்பெற்ற அற்புத ஆசிரியராவார்.
பிள்ளைப் பிராயத்தில் தனது தேவைகளை சரிவர வெளிப்படுத்தத் தெரியாத நிலையில் அவரிடம் முரட்டுத்தனம் மிகுந்திருந்தது. உலகத்தைப் பற்றிய எந்த விவரமும் அறிந்திராத அவரை அமைதிப்படுத்தி அவருள் புதைந்து கிடந்த அற்புத அறிவாற்றலையும், விடாமுயற்சியையும், சாதிக்கும் நெஞ்சுரத்தையும் வெளிக்கொணர்ந்து உலகறியச் செய்த பெருமை அவரது ஆசிரியை ஆன் சல்லிவனையே சாரும்.
1887 ஆம் வருடம் மார்ச் மாதத்தில் ஒரு நாள்! ஹெலன் கெல்லரின் புதிய வாழ்க்கைத் துவங்கப்பெற்ற அந்த நாளை தன் வாழ்வின் மறக்கமுடியாத முக்கியமான நாளாகக் குறிப்பிடுகிறார் ஹெலன். ஆம், தன் வாழ்நாளையே ஹெலனின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்த ஆசிரியை ஆன் சல்லிவனின் அருமை அறியாது,  மூர்க்கத்துடன் எதிர்கொண்ட நாள்!
ஏழு வயது ஹெலனுக்குப் பாடம் கற்றுத் தர அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்லால் ஏற்பாடு செய்யப்பட்ட இருபது வயது இளம் ஆசிரியை அவர். பெர்கின்ஸிலிருக்கும் பார்வையற்றோர் பள்ளியில் பணிபுரிந்துகொண்டிருந்த ஆன் சல்லிவனுக்கு பல அறுவை சிகிச்சைகளுக்குப் பின் ஓரளவு மட்டுமே பார்க்கும் திறனிருந்தது. ஆனாலும் அவர் தன் முழு உத்வேகத்தையும் காட்டி, ஹெலன் கெல்லருக்கு வாழும் கலையைக் கற்பித்தார் என்றே சொல்லவேண்டும். மாபெரும் சிரமங்களை எதிர்கொண்டு ஹெலனுக்குப் பாடம் கற்பித்தார். எல்லாக் கதவுகளும் மூடப்பட்ட நிலையிலும் கல்வியின் ஒளிக்கீற்றை ஹெலனின் ஆழ்மனதினுள் அற்புதமாகச் செலுத்தினார். சகிப்புத் தன்மையுடனும், பொறுமையுடனும், தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு, ஒரு ஆசிரியர் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கு பெரும் முன்மாதிரியாய்த் திகழ்ந்தார்.

No comments:

Post a Comment